Price: ₹90
Pages: 26
ISBN: -----
இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, ஃபிரான்ஸ் காஃப்காவுக்கு மிகவும் அசாதாரண அனுபவம் ஏற்பட்டது. பேர்லினில் உள்ள ஒரு பூங்கா வழியாக அவர் நடந்து செல்லும்போது, இதயம் உடைந்து அழுகிற ஒரு சிறுமியைப் பார்த்தார். அவள் தன்னுடைய பொம்மையை தொலைத்திருந்தாள். தொலைந்த பொம்மையைத் தேடுவதற்கும், அச்சிறுமியை சந்திப்பதற்கும் மறுநாள் அதே இடத்திற்கு காஃப்கா வந்தார்.ஆனால், பொம்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த பொம்மையே எழுதியதைப் போன்ற ஒரு கடிதத்தைத் தானே தனது கைப்பட எழுதினார். அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்தபோது சிறுமிக்கு அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார். அதில், “தயவுசெய்து அழாதே, நான் இந்த உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஒரு பயணம் போகிறேன். எனது சாகசங்களைப் பற்றி நான் உனக்கு கடிதம் எழுதுவேன்…” என்றிருந்தது.நிறைய கடிதங்களின் தொடக்கமாக அது அமைந்தது. அவரும் சிறுமியும் சந்தித்தபோதெல்லாம், அன்பான அந்த பொம்மையைப் பற்றிய கற்பனை சாகசங்கள் கொண்ட கடிதங்களை இருவரும் கவனமாகப் படித்தார்கள். சிறுமிக்கு உறுதி பிறந்தது. அவர்களுடைய சந்திப்பு முடிவுக்கு வந்த நாளில், காஃப்கா சிறுமியிடம் ஒரு பொம்மையைக் கொடுத்தார். அது அவளுடைய அசல் பொம்மையிலிருந்து வித்தியாசமாகத் தெரிந்தது. புதுபொம்மையோடு இணைக்கப்பட்ட கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது, “எனது பயணங்கள்… அவைகள் என்னை மாற்றிவிட்டனபல வருடங்கள் கழித்து, வளர்ந்துவிட்ட அச்சிறுமி கவனிக்கப்படாத விரிசலில் மறைந்திருந்த ஒரு கடிதத்தைக் கண்டுபிடித்து கையில் எடுத்தாள். அதில் சுருக்கமாக, “நீங்கள் விரும்பும் ஒவ்வொன்றும் இழக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இறுதியில் அன்பு வேறு வழியில் வந்தடையும்” என எழுதப்பட்டிருந்தது.அப்படி நாம் தொலைக்கும் ஒவ்வொரு பொம்மைக்குமான நம்பிக்கை கடிதங்களை எழுதும் முதலாசானாகவே அண்ணன் யூமா வாசுகி என்றுமே நமக்கிருக்கிறார். குழந்தைப்பூர்வமான பல அதியுன்னத தருணங்களை அவருடைய மொழிபெயர்ப்புகள் நமக்கு வழங்கியிருக்கின்றன. தமிழ்ச் சிறார் கதையுலகத்தின் பெருவிரிவுகள் பலவற்றை தகுந்த கால இடைவெளிகளில் அறியப்படுத்தும் ஆளுமையாகவும் இவர் படைப்புப்பணி நீள்கிறது.