Price: ₹80
Pages: 176
ISBN: -
"உலகத்தில் எந்த இலக்கியத்துக்கும் இல்லாத வரவேற்பு நகைச்சுவை இலக்கியத்துக்கு உண்டு. எவ்வளவுதான் தீவிர இலக்கிய வாதியாக இருக்கட்டுமே. அவருக்கு முன்பாக உலகத்தின் தலைசிறந்த இலக்கியப் புத்தகங்களையும் அவற்றோடு ஒரு நகைச்சுவைப் புத்தகத்தையும் சேர்த்து பரப்பி வைத்தால் இலக்கியவாதி முதலில் கையில் எடுக்கும் புத்தகம் எது? உங்களுக்கே தெரியும். 'எனக்கு மட்டும் சிரிக்கத் தெரியாது இருந்தால் நான் என்றைக்கோ செத்துப் போயிருப்பேன்’ என்ற இந்த மிக உண்மையான தங்க வாக்கியத்தை யாராவது ஒர் அறிஞர், ஏதாவது ஒரு காலகட்டத்தில், எங்காவது ஒரிடத்தில் நிச்சயம் சொல்லியிருக்கக் கூடும். ஒரு விலங்கு சிரிக்கப் பழகிக் கொண்டு விட்டால் அது மனிதனாகி விடுகிறது. ஒரு மனிதன் சிரிப்பதை மறந்து விட்டால் அவன் மிருகமாகி விடுகிறான். வீட்டை விட்டு வெளியே சென்றால் திரும்பி வரும் வரையுள்ள பிரச்னைகள், வீடு திரும்பிய பின் வீட்டுக்குள் உள்ள குடும்பப் பிரச்னைகள் என அங்கிங்கெனாது எங்கும் நிறை பிரச்னைகள் இன்றைய அதிதுரித வாழ்க்கையில் பெருகிப் போனதில் நாம் சிரிப்பதை மறந்து இருபத்து நான்கு பெருக்கல் ஏழு மூல வியாதிக்காரர்களைப் போல முகத்தை வைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டோம். பொதுவாக மற்றவர்கள் வாழைப்பழத் தோல் வழுக்கி விழுவதைப் பார்த்தாலோ, வேறு ஏதாவது பிரச்னையில் சிக்கி அவஸ்தைப்படுவதைப் பார்த்தாலோதான் சிரிப்பது உலக வழக்கம். அனுராதா ரமணன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சங்கடமான சம்பவங்களையே மிகவும் நகைச்சுவையுடன் சொல்லி இடுக்கண் வருங்கால் நகுதலுக்கு வழி காட்டுகிறார். தத்தம் பிரச்னைகளைக் கண்டே சிரித்துப் பழகக் கற்றுத் தருகிறார். பழகலாம், வாங்க. வாய்விட்டுச் சிரிப்பது உடலுக்கு ஆரோக்கியம் என்பது மட்டுமல்லாது, சிரித்த முகத்துடன் இருக்கும் மனிதனின் உறவும், தொழிலும், வாழ்வும் சிறக்கும். உங்கள் வாழ்வும் சிறக்க வேண்டும். அதுதான் அனுபவத் திலகம் அனுராதா ரமணன் மற்றும் எங்களுடைய ஆசையும் கூட!