Price: ₹100
Pages: 230
ISBN: ----
ஒரு பொறுப்புணர்வுமிக்க காந்தியவாதியும்¸ இக்கட்டுரையின் ஆசிரியருமான திரு பாதமுத்து தமது கருத்துக்களை ‘பளிச்”சென்று படிப்பவர் மனதில் பாயுமாறு ‘அண்ணலின் அமுதசுரபி”யில் இக்கட்டுரைகளை படைத்திருக்கிறார். அண்ணல் காந்திஜி அவர்கள் சமுதாயப் பாவங்களாக பட்டியலிட்டுள்ள ஏழு பாவங்களையும் எல்லா நிலைகளிலும் மக்கள் செய்து வருவதைத் தான் முனைவர் பாதமுத்து தமது கட்டுரைகளில் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே” என வேதனையுடன் குறிப்பிடுகின்றார். இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில் உள்ளது என்ற காந்திஜியின் வார்த்தையை மறந்துவிட்டு¸ 5¸12¸000 கோடி ரூபாயைச் பெயர்த்தெடுத்து நகரங்களில் குடியேற்ற முயலும் வேதனையை விளக்கமாகக் கூறுகிறார் ஆசிரியர். சீனஞானி கன்பூசியஸின் ஞானச்சுடர் எப்படிப் பண்பாட்டை வளர்த்து வந்துள்ளது என்பதை மற்றொரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்¸ நம்நாட்டில் செல்வர்க்கும் ஏழைக்குமுள்ள - மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியைக் கூறுகிறார். பாராளுமன்றம் வெறும் அரட்டை அரங்கமாக இல்லாமல் பொருளாதார சுதந்திரம்¸ தார்மீக சமூக அம்சம்¸ தர்மம்¸ அரசியல் சுதந்திரம் என்ற சதுரவடிவமான சுயராஜ்யத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் ஆசிரியர் இந்த அம்சங்களில் முறையாகப் பயிற்சியளிக்கும் களமாகப் பஞ்சாயத்துக்கள் இயங்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை வலியுறுத்துகின்றார். நிறைய தகவல்கள்¸ ஆங்காங்கே சான்றோரின் பொன்மொழிகள்¸ சிற்சில இடங்களில் சரியான புள்ளி விவரங்கள்¸ வேதனை கலந்த நகைச்சுவைத் துணுக்குகள் இவற்றுடன் தாம் சொல்ல வந்த கருத்துக்களை தெளிவாகக் கூறி விளங்க வைப்பது தான் இந்த நூல் ஆசிரியரின் பாணி.