Price: ₹135
Pages: 326
ISBN: 9788184765694
தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. கல்வெட்டுகள், தொல்பொருள் சின்னங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், பழைய காசுகள் போன்றவை இராசராசனின் பெருமைகளை பறைசாற்றும் வரலாற்று ஆதாரங்களாக உள்ளன. தன் ஆட்சியில் நிழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால வரைமுறைப்படுத்தி, இனிய தமிழில் ‘மெய்க்கீர்த்தி’யாக அவன் வெளியிட்டுள்ளான். அவை, அரசியல் வரலாற்றை எழுதுவதற்கு உறுதுணையாக உள்ளன. இந்த மெய்க்கீர்த்தி முறையைப் பின்னால் வந்த அரசர்கள் பலரும் போற்றிப் பின்பற்றியுள்ளனர். சோழ நாடு, பெரிய மலைகள் இல்லாத பெருநிலப் பரப்பாக விளங்கியது. காவிரி, பல கிளையாறுகளாகப் பாய்ந்து அந்த நாட்டை வளமடையச் செய்தது. நீர் வளமும், நில வளமும் கொண்ட சோழ நாட்டைச் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று சான்றோர்கள் புகழ்ந்தனர். நீர் வளமும், நிலவளமும் இருந்தால் மட்டும் ஒரு பேரரசை ஆட்சி செய்துவிட முடியுமா? ‘கோன் எவ்வழியோ குடி அவ்வழி’ என்பதில்தானே ஒரு நாட்டின் வளமும், நலமும் அடங்கியுள்ளன!